• Mo. Okt 18th, 2021

முல்லைத்தீவில் வகைதொகையின்றி அழிக்கப்படும் காடுகள்

Jul 2, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு காணி கூட இல்லாத சுமார் 3,750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காணி கோரியுள்ள நிலையில் அவர்களுக்கான காணிகள் இன்றுவரை வழங்கப்படவில்லை இதற்கு ஒவ்வொரு திணைக்களங்கள் மற்றைய திணைக்களங்களில் சாட்டுக்களை முன்வைத்து இழுத்தடித்து வருகின்றனர்.

இதனைவிட ஏழை மக்கள் வாழ்விடத்திற்கு ஒரு சிறு துண்டு காணி பிடித்தால்  விவசாய தேவைக்காக தடி வெட்டினால்  கூட கைது செய்பவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கும்  வனவள திணைக்களத்தினர்,  பொலிசார், பிரதேச செயலக ஊழியர்கள் என அனைத்து துறையினரும் செல்வந்தர்கள் காடழிப்பு செய்து காணி அபகரிக்கும் நேரங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? அவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அமைதி காக்கிறார்களா?  என குற்றச்சாட்டுக்கள்  எழுந்துள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்ட விவகாரம் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திப்பிலி பகுதியில் அரச அதிகாரிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்கள் என பலர் இணைந்து காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க  செயலக ஊழியர்கள் பின்னடித்து வந்தனர் இந்நிலையில் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில் படிவம் ஒட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பாரிய காடழிப்பு இடம்பெற்று வருகின்றது ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கின்றனர் இவ்வாறு செல்வந்தர்கள் காடழிப்பு செய்து காணி அபகரிக்கும் நடவடிக்கைகளில் உடந்தையாக செயற்படும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டு உதவி செய்பவர்களை கைது செய்ய உடனடியாக மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு இந்த காடழிப்பு மற்றும் இயற்கை வள சுரண்டல்களுக்கு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் ஆளுநர் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்புக்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்ட வளங்களை பாதுகாக்க உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காதலியார் சமணங்குளம் கிராம அலுவலர் பிரிவில் புதுக்குளம் செல்லும் வீதியில் அமைந்துள்ள குருவிச்சை ஆற்றினை அண்மித்த பகுதியில் கிராம அலுவலர் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களின் தடையினையும் மீறி காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கும் முயற்சி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்தில் கனரக இயந்திரங்கள் கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு  காணி அபகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக மூன்று ஏக்கருக்கு அதிகமான பகுதி காடுகள் அழிக்கப்பட்டு காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ளதோடு குறித்த காணி அபகரிப்பு தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

குறித்த காணியினை மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் காடழிப்பு செய்து காணி அபகரித்த பிரதேச சபை உறுப்பினரின் கனரக இயந்திரமே துப்பரவு செய்துள்ளதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர் பிரதேச செயலாளர் கிராம அலுவலரின் அனுமதி இன்றி குறித்து காடழிப்பு இடம்பெற்றபோதும் பொலிசார் குறித்த சம்பவத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக நேற்று மாலை குறித்த இடத்தில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக   பொலிசாருக்கு தெரிவித்த போதும் குறித்த பகுதியில் இருந்து கனரக இயந்திரங்கள் வெளியே கொண்டுவரப்பட்டு பிறிதொரு காணிக்குள் விடும்வரை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை குறிப்பாக 3.7 கிலோமீற்றர் தூரத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் காணப்படுகின்ற போதிலும் 35 நிமிடங்கள் கழித்தே சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து விட்டு குறித்த காணியில் கனரக இயந்திரம் இல்லை என்று கூறிவிட்டு காணி உரிமையாளர்களிடம் (பிரதேச செயலகம் ,வளவள திணைக்களம்) விசாரித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக சென்றுள்ளனர் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதி பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என தெரிவித்தனர்.

விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் இரண்டு ஏக்கர் காணிக்கு  தற்காலிக வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒன்று இருப்பதாகவும் அதனை கொண்டு குறித்த காடாக இருக்கும் காணியை  துப்பரவு செய்ய கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட வர்களிடம் அனுமதி கோரிய போதும் அணுமதி மறுக்கப்பட்டதாகவும் தமது தடைகளை  மீறியே குறித்த  செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ள போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தமை நடவடிக்கைகள் மேற்கொள்ளாமை பொலிசாரின் உடந்தையுடனே குறித்த செயற்பாடுகள் இடம்பெற்றதனை உறுதிப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடரும் செயற்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்

.