Press "Enter" to skip to content

வேலுப்பிள்ளை பிரபாகரன் : வரலாற்றின் ஒரு காலகட்டப் பாய்ச்சல். -PKR-

வேலுப்பிள்ளை பிரபாகரன் : வரலாற்றின் ஒரு காலகட்டப் பாய்ச்சல்.

புரட்சியாளர்களில் புரட்சியாளன் Thomas Sankara வை கறுப்பு சேகுவேரா என்றும்/ புரட்சியாளன் Samora Moisés Machel ஐ கறுப்பு கஸ்ட்ரோ என்றும் அழைக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களின் தாக்கத்திலிருந்தும், அவர்களை அடியொட்டியும் இவர்கள் தமது போராட்டத்தை வடிவமைத்ததால் வரலாற்றில் இப்படி அழைக்கப்படுகிறார்கள்.

இதே போன்று தமிழீழத்திலும் தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாளப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.
இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.

முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

இதே போன்று மனித குல வரலாற்றில் இதுவரை உதித்த போராளிகள், புரட்சியாளர்கள், கோட்பாட்டாளர்கள், தத்துவவாதிகளுக்கு அவர்களது ஆளுமை சார்ந்து ஒரு தனித்துவ அடையாளம் இருந்தது.
அதனால் அவர்களை அடியொட்டிய – அவர்களின் இசங்களை கற்றுத் தேர்ந்த ஒரு தலைமுறையின் தொடர்ச்சி வரலாற்றில் அடையாளம் காணப்பட்டது.

ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பல முகங்கள் – பல பரிமாணங்கள். எல்லாவற்றினதும் கூட்டுருவமாக –
குறியீடாக ஒரு சுயம்புவாக வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றை ஊடறுத்து தனித்து நிற்கிறார்.

இதுவரை கால மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் – விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்.

ஏனைய தலைவர்களிடமிருந்து பிரபாகரன் வேறுபடும் முக்கிய பண்பு இது.

ஏனைய புரட்சியாளர்களின் போராட்ட வாழ்விலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொண்ட போதும் ஒரு கட்டத்தில் அவர்களது நிறைந்த பேச்சும் – உரையும் – எழுத்தும் அவர்களை அந்தப் பரப்புக்குள்ளேயே சுருக்கிக் கொண்டது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான நமது தேடலையும் – சிந்தனையையும் அதற்குள்ளேயே முடித்தும் கொண்டது.

இந்த இடத்தில்தான் பிரபாகரனின் ‘மவுனம்’ அதியுச்ச பரிமாணத்தை எட்டுகிறது.
இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை.
இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான்.
தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ‘ பிரபாகரனியத்தின்’ மைய சரடே இந்த மவுனம் தான்.

ஏனைய புரட்சியாளர்கள் தங்களை தாங்களே எழுதினார்கள். மக்களுக்கும் போதித்தார்கள். அதை சிந்தனையாளர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்து கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற வரலாற்று பாதிரத்திற்கு எந்த முன்மாதிரியும் கிடையாது. இனியும் இருக்கப் போவதுமில்லை.

அது வரலாற்றின் ஒரு கால கட்டப் பாய்ச்சல்.

அது வரலாற்றில் ஒரு முறைதான் நிகழும் – அது நிகழ்ந்து விட்டது.

Be First to Comment

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.